Thursday, November 12, 2009

சொந்த செலவில் சூனியம் - கடன் அட்டை உபயோகிப்போரின் அவல நிலை - I


சொந்த செலவில் சூனியம் என்பது கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை வைத்திருப்பவர்களையே குறிக்கிறது என கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யலாம்.

மாதத்திற்கு ஒரு முறையாவது ஏதேனும் வெகுஜன வார இதழ்களிலோ தினசரி நாளிதழ்களிலோ கிரெடிட் கார்டுகளினால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும் அதனை உபயோக படுத்துவோரின் எண்ணிக்கையோ, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையோ குறைந்ததாகவே இல்லை.

ஒரு வருடத்துக்கு முன்பு வரை கையெழுத்து மட்டும் போட்டால் போதும் வீடு தேடி இலவசமாக கிரெடிட் கார்டு வரும் என்ற நிலை இருந்தது .இன்னும் சில நிறுவனங்கள் இலவசமாக கிரெடிட் கார்டை கொடுத்து,அதற்கும் இலவசமாக சில பொருட்களையும் வழங்கின.

பொருளாதார மந்த நிலைக்கு பின் பெருவாரியான கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கி வந்த சலுகைகளை நிறுத்தி கொண்டன. சில நிறுவனங்கள் கிரெடிட் கார்டு சேவையையே கை விட்டன.

இலவசமாய் கிடைக்கிறது என்ற மன ஓட்டத்தில் வரம்பு மீறி செலவினை செய்து கடனாளிகளாகி பலர் பணம் கட்ட முடியாமல் ஓடி விட, சரியாக பணம் கட்டுபவர்களின் தலையில் மிளகாய் அரைத்து கொண்டு இருக்கின்றன சில நிறுவனங்கள்.

என் அலுவலக நண்பர் ஒருவரும் இந்த நிறுவனங்களில் தில்லு முல்லுவில் சிக்கி மனம் நொந்து போனார் என்றே சொல்ல வேண்டும்.

" அநியாயத்துக்கு நல்லவன்பா " என தாராளமாய் அவரை நோக்கி சுட்டி காட்டலாம். பணப்பை( பர்ஸ்) நிறைய கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பார். ஏன் எப்படி வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால் 'இந்த கிரெடிட் கார்டுகளை வாங்கி கொள்வதில் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவது இல்லை ,ஆனால் அதை விற்பனை செய்யும் இளைஞனுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும்' என்று பதில் வரும்.மிக மிக அவசர தேவை என்றால் மட்டும் கிரெடிட் கார்டு களை உபயோக படுத்துவார்.

பத்து நாள் விடுப்பில் வெளியூர் செல்ல இருந்ததால் கிரெடிட் கார்டு க்கு செலுத்த வேண்டிய தொகையை கடைசி தேதிக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பாகவே காசோலையாக(Cheque) அருகில் இருந்த வங்கியின் தானியங்கி பண இயந்திரத்தின்(ATM) அருகில் இருக்கும் பெட்டிக்குள் இட்டு சென்றார். விடுப்பு முடிந்து வந்து தனது வங்கி இருப்பை பார்த்த போது பணம் குறையாமல் இருந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு காசோலை பற்றியும், பணம் எடுக்கப்படாதது பற்றியும் மின்னஞ்சல் அனுப்பினார். இவருக்கு வந்த தானியங்கி பதில் மின்னஞ்சலில் '72 - மணி நேரத்துக்கு உள்ளாக உங்கள் குறை நிவர்த்தி செய்யப்படும்' என்று இருந்தது.

72 - மணி நேரத்துக்கு பிறகும் எந்த தகவலும் வராததால் மற்றொரு மின்னஞ்சலை தட்டி விட்டார் மீண்டும் முன்பை போன்ற பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலே வந்தது .இதற்கிடையே அடுத்த மாத கணக்கு விவர அறிக்கை(statement)-யும் வர அதிர்ந்து போய் விட்டார் . சுமார் மூவாயிரம் ரூபாய் தொகைக்காக,ஆயிரத்து சொச்ச ரூபாய் அபராத தொகையாக விதித்து இருந்தார்கள் , வங்கிக்கு தொலைபெசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, திரும்பவும் பழைய பதிலே வந்தது. மீண்டும் சுமார் ஒரு வார துரத்தலுக்கு பின் அவரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது அவர்கள் சொன்ன பதில். அது 'தங்களுடைய காசோலை கிடைக்கவில்லை' என்பது தான். வங்கி எ.டி. எம்- யில் காசோலையை இட்டு விட்டதால் ஆதார பூர்வமாக நிரூபிக்கவும் முடியவில்லை.

இந்த சங்கடங்களில் சில நாட்கள் கடந்து போக வட்டி இன்னும் பெருகி இருந்தது. வாய் வலிக்க பேசியும் வங்கியினர் ஒரு உடன்படிக்கைக்கும் வராததால் எல்லாவற்றையும் கட்டிவிட்டு கடன் அட்டையையும் தலை முழுகினார்.

கடன் அட்டைகள் வேண்டுமா என்று யாராவது கேட்கும் போது அவருக்கு எற்படும் பதட்டத்தையும் அதனால் எற்பட்ட வலியையும் சுமார் ஆறு மாத காலமாகியும் தவிர்க்க முடியவில்லை ....

- தொடரும்